Friday, 23 July 2021

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய 

 "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன் படித்துப் 

பயன்பெறுங்கள்:


தினமும் நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஆசிரியர் ஒரு உயிருள்ள தவளை என கற்பனை செய்கிறார். 

அந்த வேலையை செய்து முடிப்பது ஒரு தவளையை தின்று முடிப்பதற்கு சமம் என்று அவர் கூறுகிறார். ஆசிரியர் ஏன் தவளையை உதாரணமாகக் கூறுகிறார்? மாம்பழம் ஆப்பிள் என சுவையான விஷயங்களை உதாரணமாக கூறி இருக்கலாமே? என்னதான், நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அத்தியாவசியமானதாக இருந்தாலும் நாம் அவற்றை செய்வதற்கு கஷ்டப்படுகிறோம்; வேண்டா வெறுப்போடு செய்கிறோம்; முடிந்த அளவு அந்த வேலையை ஒத்திப் போட நினைக்கிறோம் எனவேதான் நாம் செய்வதற்கு சிரமப்படும் வேலைகளை ஒரு அவலட்சணமான தவளையாக ஆசிரியர் கற்பனை செய்து தருகிறார். ஒரு தவளையை உண்ணுவது என்பது சாதாரண காரியமல்ல, 

எனவே தான் நாம் கஷ்டம் என எண்ணும் வேலைகளை முதலில் முடித்து விட்டால் மற்ற வேலைகள் சுலபமாகிவிடும் என்பதை இதன் மூலம் ஆசிரியர்  எடுத்துரைக்கிறார்


காலையில் எழுந்தவுடன் மிகவும் கடினமான வேலை என்று நீங்கள் கருதும் வேலையை முதலில் செய்து முடித்து விடுங்கள் ஆம் உங்களை பயப்படுத்தும் அந்த கொடிய தவளையை தின்று முடித்து விடுங்கள்!



🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸



வெற்றிக்கான 7 ஃபார்முலா:


 1.உங்களுக்கு எது தேவை என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்.


2. உங்களது இலக்குகளை எழுத்துவடிவில் எழுதி வையுங்கள் அப்பொழுதுதான் அவற்றை பார்க்கும்போதெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.


 3.உங்கள் இலக்குகளை அடைவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

 அதாவது 

"செப்டம்பருக்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும்" 

இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.


4. உங்கள் இலக்குகளை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள்.


5. பட்டியலிட்ட விஷயங்களில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த நன்கு திட்டமிடுங்கள்.


6. நன்கு திட்டமிடப்பட்ட செயல்களை உடனடியாக செயல்படுத்த தொடங்குங்கள்.

 வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தங்களது திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியதனாலேயே அவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பதை மறந்து விடாதீர்கள்.

 ஒரு அருமையான திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதைவிட ஒரு சுமாரான திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது என்பது பல மடங்கு மேலாகும்.


7. உங்கள் இலக்குகளை அடைவதற்கான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். உங்கள் திட்டங்களை பல பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வந்தால் ஒரு நாள் உங்கள் இலக்கை நிச்சயம் அடைந்து விடுவீர்கள்.


🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸


நாளை செய்ய வேண்டியதை இன்றே திட்டமிடுங்கள்.

 அடுத்த வாரம் செய்ய வேண்டியது இந்த வாரமே திட்டமிடுங்கள். அதேபோல அடுத்த மாதம் செய்யவேண்டியதை இந்த மாதம் திட்டமிடுங்கள்.

 அடுத்த வருடத்துக்கான திட்டங்களை தற்போது செயல்படுத்த தொடங்குங்கள். எதிர்காலத்துக்கான திட்டமிடுதலை தற்போது செயல்படுத்த தொடங்குவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது!


🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸


80/20 ஃபார்முலா:


நம்முடைய 20 சதவீத நடவடிக்கைகள்தான் 80 சதவீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


நீங்கள் செய்யும் 20 சதவீத வேலைகள்தான் 

நீங்கள் செய்பவற்றின் 80 சதவீத மதிப்பை தீர்மானிக்கின்றன.


இதன் பொருள், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உள்ளடக்கிய ஒரு பட்டியலில் 10 வேலைகள்

இடம்பெற்றிருந்தால் அவற்றில் இரண்டு வேலைகள் மற்ற எட்டு வேலைகளில் ஒட்டு மொத்த மதிப்பை விட

மிக அதிகமான மதிப்பு கொண்டவையாக இருக்கும்.


பல சமயங்களில் மற்ற ஒன்பது வேலைகளையும் விட ஒரு ஒருவேளை அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் அந்த வேலை தான் நீங்கள் முதலில் உண்ணவேண்டிய தவளை!


ஆனால் ஒரு சராசரி மனிதர் தான் செய்ய வேண்டிய 10 வேலைகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு வேலைகளையே பொதுவாக ஒத்திப் போடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன!


மிகவும் மதிப்பு வாய்ந்த 20 சதவீத பணிகளை ஒத்தி வைத்துவிட்டு, அவற்றை விட மிக மிக மதிப்பு குறைந்த 80 சதவீத வேலைகளிலேயே நாம் முழு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 


நாம் செய்யும் வேலைகள் 20% முக்கியமான வேலைகளா? அல்லது 80 சதவீதம் முக்கியமற்ற மதிப்பு குறைந்த வேலைகளா? என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

 80 சதவீத மதிப்பு குறைந்த வேலைகளை செய்வதை விட்டுவிட்டு 20 சதவீத மதிப்புமிக்க வேலைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் பலன்களும் வெகுமதிகளும் அதிகம்! 80 சதவீத முக்கியமற்ற வேலைகளை ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் செய்ய ஆரம்பித்தால் அதுவே ஒரு பழக்கமாகி விடும் அதன் மூலம் எந்த ஒரு மன நிறைவும் நமக்கு கிடைக்கப் போவதில்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 80 சதவீத வேலைகளை செய்ய நாம் ஒதுக்கும் அதே நேரம் தான் மதிப்பு மிக்க 20 சதவீத வேலைகளை செய்யவும் நாம் எடுத்துக் கொள்கிறோம்


எனவே இந்த 80/20 ஃபார்முலாவை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்!


🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸


ஒரு வேலையை குறித்த காலக்கெடுவுக்குள் செய்து முடிப்பதன் மீது நீங்கள் ஒருமித்த கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்கு அடிக்கடி உங்களை நீங்களே மூன்று கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்.

1. என்னுடைய மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த நடவடிக்கைகள் எவை?

இதை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால்  உங்கள் முன்னேற்றத்துக்காக நீங்கள் உண்ண வேண்டிய மிகப்பெரிய தவளைகள் எவை?


2. என்னால் மட்டுமே செய்து முடிக்கக்கூடிய எந்த வேலை அதை நான் சிறப்பாக செய்து முடிக்கும் பட்சத்தில் ஓர் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும்?


இது ஒரு முக்கியமான கேள்வி இந்த வேலையை உங்களை விட யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்ற வகையைச் சேர்ந்த வேலை அது.

ஆனால் அந்த வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.

உங்கள் விஷயத்தில் இந்த குறிப்பிட்ட தவளை எது?

தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த கேள்வியை கேட்டு அதற்கான விடையை கண்டுபிடியுங்கள்.

விடையை கண்டுபிடித்த பிறகு மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.


3. இந்த நொடியில் எனது நேரத்தை எந்த விஷயத்திற்காக செலவிடுவது எனக்கு மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்?

அதாவது இந்த நொடியில் நான் உண்ண வேண்டிய மிகப் பெரிய தவளை எது?

சூழ்நிலைகளைப் பொறுத்து நமது முக்கியமான வேலைகள் மாறுபடலாம் எனவே அந்த நொடியில் நாம் இந்த கேள்வியை கேட்டு பார்த்து நமது முக்கியமான வேலையை செய்து முடிக்க வேண்டும்.


🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸


ABCD Formula:


நீங்கள் உங்கள் வேலைகளை பட்டியலிடும் போது அவற்றை ஏ பி சி டி இ என வரிசைப்படுத்துங்கள். நீங்கள் இந்தபொழுதில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஏ பிரிவில் 

வகைப்படுத்துங்கள்.

மிக முக்கியமான வேலைகள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அவற்றை   ஏ1 ஏ2 ஏ3  என வரிசைப்படுத்துங்கள்.


ஏ1 வேலை நான் நீங்கள் முதலில் உண்ண வேண்டிய அவலட்சணமான தவளையாகும் எனவே அந்த வேலையை முதலில் செய்து முடியுங்கள்.


பி வகை வேலைகளும் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் தான் ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லாத தவளைக் குஞ்சுகள் போன்றதாகும் எப்பொழுதுமே தவளைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தவளை குஞ்சுகளுக்கு அல்ல!


ஏ பிரிவு வேலைகள் முடிக்கப்படாமல் இருக்கும் போது நீங்கள் பி பிரிவு வேலைகளை தொடங்கவே கூடாது.


சி வகை வேலைகள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தொலைபேசியில் உரையாடுவது மேலும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் பார்ப்பது போன்ற முக்கியமில்லாத செயல்களாகும் இவற்றை செய்வது இனிமையாக இருக்கலாம் ஆனால் அவற்றால் பெரிய உபயோகம் எதுவுமில்லை 


டி வகை வேலைகள் நாம் பிறரிடம் ஒப்படைக்க கூடிய வேலைகள் ஆகும் நாம் செய்யவேண்டிய வேலைகள் பிறரால் செய்து முடிக்கக்கூடிய பட்சத்தில் அவர்களிடம் தாராளமாக ஒப்படைக்கலாம் இதன் மூலம் நமக்கு ஏ வகை வேலைகளை முடிப்பதற்கான கால அவகாசம் நிறைய கிடைக்கும்.



 இ வகை வேலைகள் நாம் முற்றிலும் செய்ய தேவையே இல்லாத தூக்கி எறியக் கூடிய வேலைகளாகும் இவற்றை பிறிதொரு நாள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.


எப்பொழுது உங்கள் ஏ1

வகை வேலைகளை முதலில் முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அப்பொழுதே நீங்கள் சாதனையாளர்களாக மாறு தொடங்குகிறீர்கள்.


🌺🌻🌸🌺🌺🌸 🌸🌻🌸


நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில் எப்படியெல்லாம் செயல்படுகிறோம் என நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

 நம் பலம் எது? பலவீனம் எது? என்பதை பட்டியலிட்டு நமது பலவீனங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 பல சமயங்களில் நாம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்ட பலவீனமான செயல்களில் மீண்டும் ஈடுபடுவதை தவிர்த்து ஒத்திப் போடுகிறோம் ஆனால் அவ்வாறு செய்யாமல் நமது பலவீனமான விஷயங்களையும் சிறப்பாக செய்வதற்கு நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஒரு பெண்மணி அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருப்பதாலும் அந்த பணிச்சுமை காரணமாக குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க இயலவில்லை என்றும் புலம்பினாள்.

 திறன் மேம்பாட்டாளர் ஒருவர் அவளுக்கு ஒரு யோசனை கூறினார்  அவளது அலுவலகத்திற்கு அவள் வழங்கும் மதிப்பு மிக்க சேவைகளை பட்டியலிட  சொன்னார். அதன்படியே அவள்  17 விஷயங்களைப் பட்டியலிட்டாள். அதிலிருந்து முக்கியமான முதல் மூன்று விஷயங்களை தேர்ந்தெடுக்க சொன்னார். அவளும் அப்படியே தேர்ந்தெடுத்தாள். 

நீ தேர்ந்தெடுத்த அந்த மூன்று விஷயங்களைத் தவிர மீதமுள்ள 14 விஷயங்களும் தேவையில்லாத மற்றவர்களிடம் ஒப்படைக்க கூடிய விஷயங்களே

 என்றார்

அந்த திறன் மேம்பாட்டாளர் .

 அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது நினைத்து பார்த்தால் அவள் தேர்ந்தெடுத்த முதல் மூன்று விஷயங்கள்தான் தனது அலுவலகத்திற்கு அவள்   90 சதவீத மதிப்புமிக்க சேவையை வழங்கும் விஷயங்களாக இருந்தன

இந்தப் பட்டியலை தனது முதலாளியிடம் காட்டி அவள் வழங்கிவந்த மதிப்பு குறைவான 14 விஷயங்களை வேறொருவருக்கு பகிர்ந்தளிக்க செய்ததன் மூலம் இவளுடைய திறமை மேம்பட்டதோடு சம்பளமும் இரட்டிப்பானது குடும்பத்துக்காக செலவழிக்க நேரமும் கிடைத்தது.


🌺🌻🌸🌺🌺🌸🌻🌸


எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் அதற்கு தேவையான விஷயங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் அந்த செயல் சிறப்பாக நிறைவுபெறும்.


நாம் சிறப்பாக செயல்படுவதை ஏதோ ஒரு காரணி கட்டுப்படுத்துகிறது அது எது என்பதை நன்கு ஆராய்ந்து அந்த காரணியை சரி செய்து விட்டால் நமது செயல்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.


ஒருவர் வாழ்வில் வெற்றி பெற சுய ஊக்கம் என்பது மிகவும் முக்கியமாகும் அடுத்தவர் வந்து நம்மை ஊக்கப்படுத்தும் என்று எப்போதும் எதிர்பார்க்கக்கூடாது அது பேருந்துகள் ஓடாத சாலையில் அவற்றுக்காக நாம் காத்திருப்பது போன்றதாகும்.

 நமக்கு நாமே அழுத்தம் கொடுத்துக் கொண்டு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டு நமது இலக்குகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.


நம்முடைய குறைகளை பிறரிடம் கூறாமல் நமக்கு நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு நேர்மறை எண்ணங்களுடன் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


🌻🌸🌺🌺🌸🌻🌸🌻🌸


தொழில்நுட்பத்தை எவ்வளவு குறைவாக அதே சமயம் உபயோகமாக பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துங்கள் ஸ்மார்ட் போன் போன்ற கருவிகளை ஒரு நாளில் சில மணி நேரங்களோ ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுக்கவோ பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

 இவ்வாறு செய்தால் நாம் நம் முக்கியமான வேலைகளை செய்வதற்கு மேலும் கூடுதலான கால அவகாசமும் நேரமும் கிடைக்கும்.


ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள்  பலவீனமானவர்களாக

திறமை குறைவானவர்களாக உணரும் போது உங்களது செயல்களை ஒத்தி போடுகிறீர்கள். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது எனவே உங்களது திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.


நாளையோடு காலக்கெடு முடிவதாக கற்பனை செய்துகொண்டு உங்களது அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும்.

🌻🌸🌺🌺🌸🌻🌸🌻🌸

Friday, 13 December 2019

இறையருள்!

படித்ததில் உருக்கிய பகிர்வு!



அவள் எங்கே இருக்கிறாள்?

மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது.

பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.
''மனதில் பெரிய கேள்வியை வைத்துக்கொண்டு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய்?''
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்து இருக்கைக்காரி பச்சை புடவைகாரியாக மாறியிருந்தாள்.

''உன் கண்களுக்கு மட்டும்தான் தெரிவேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.''

''தாயே மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கடையூரில் அபிராமியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி உறையும் இடம் என்ன?''

''முட்டாளே! நான் மதுரையிலும், காஞ்சியிலும், காசியிலும் இல்லை. மதுரை, காஞ்சி, காசி இவை எல்லாம் தான் என்னுள் இருக்கின்றன. நான் உலகத்தில் இல்லை. இந்த உலகம் தான் என்னுள் இருக்கிறது.''

''தாயே தத்துவம் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இடம்?''
''வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவியடா நான்.''

''மீண்டும் தத்துவமா? பிடித்த இடம் என்னவென்று சொல்வீர்களா அதைவிட்டு விட்டு..''

''அங்கே நடக்கும் காட்சியைப் பார்''

இடம் மும்பை.
ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் ஒரு ஆறு வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள். மறுநாள் அவளுக்கு ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவளுடைய பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள்.

''பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லைம்மா. நீ எதுக்கும் கவலைப்படாத. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.''

''ஐயையே! நான் பயப்படல டாக்டர். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.''

''சொல்லும்மா.''
''நீங்க என் இதயத்த திறந்து பாப்பீங்க இல்லையா?''
''ஆமாம்மா. இது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி. இதயத்தைத் திறந்து தான் செய்யணும்.. ஆனா உனக்கு வலிக்கவே வலிக்காது.''
'அதைப் பத்தி எனக்குப் பயமில்லை டாக்டர். எங்கம்மா தினமும் சாமி கும்பிடுவாங்க. ஒரு நாள் சாமி எங்க இருக்காருன்னு கேட்டேன். உன் இதயத்துக்குள்ள இருக்காருன்னு சொன்னாங்க. நீங்க என் இதயத்தைத் திறந்தா சாமியப் பாப்பீங்கல்ல? சாமி எப்படி இருக்காருன்னு எனக்குச் சொல்றீங்களா?''

திகைத்துப் போன அறுவை சிகிச்சை நிபுணர் சிறுமியை இறுக அணைத்துக்கொண்டார்.

மறுநாள் அதிகாலை.
அறுவை சிகிச்சை தொடங்கியது. அவர் நினைத்ததைவிட சிக்கல்கள் அதிகமாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அறுவை சிகிச்சை தொடங்கி நாற்பத்தியைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இதயத்திற்குச் சென்று கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது.

இனிமேல் அந்தச் சிறுமி பிழைக்கமாட்டாள் என்று தோன்றியது... அறுவை சிகிச்சை செய்த இடத்தைத் தைத்தபின் சிறுமியின் உடலை அவளுடைய பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். சே, என்ன வாழ்க்கை இது!

அப்போதுதான் முதல் நாள் அந்தச் சிறுமி சொன்னது நினைவிற்கு வந்தது. தன் இதயத்திற்குள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாளே அவள்!

கழற்றத் தொடங்கிய முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டார். பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு இதயத்தைப் பார்த்துக் கைகூப்பினார்.

''இறைவா நீ இந்த இதயத்தில் இருக்கிறாய் என்று இந்தக் குழந்தை நம்புகிறது. இந்த உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். இனி இந்தக் குழந்தை உன் கையில். இவள் வாழ்வதும் சாவதும் உன் கையில். நான் கற்ற கல்வி, இத்தனை ஆண்டுகளில் பெற்ற திறமை அனைத்தையும் உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்தக் குழந்தை இனி உன்னுடையவள்.''

அவர் கண்களில் நீர்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அலறினார்.

''டாக்டர் இதயம் நல்லாத் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. பாருங்க ரத்த அழுத்தம் கடகடன்னு ஏறுது.''

அறுவை சிகிச்சையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் நிபுணர். அதன்பின் நான்கரை மணி நேரம் சிகிச்சை தொடர்ந்தது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இப்போதெல்லாம் அந்த நிபுணர் கோயிலுக்குச் செல்வதில்லை. எப்போதெல்லாம் குருதியில் அமிழ்ந்திருக்கும் மனித இதயத்தைப் பார்க்கிறாரோ அப்போது எல்லாம் கைகூப்பி வேண்டிக்கொள்கிறார்.

ஒவ்வொரு முறையும் தன் கல்வி, திறமை அனைத்தையும் இறைவனின் திருவடி சமர்ப்பணம் செய்துவிட்டுப் பதட்டமில்லாமல் சிகிச்சை செய்கிறார்.

'இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கும்' என்ற அறிவிப்பு வந்தது.

''இப்போது உனக்கே தெரியுமே, எனக்குப் பிடித்த இடம் எதுவென்று?''
''ஆம் தாயே. உங்கள் அன்பில் நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்கள்தான் சிறந்த திருக்கோவில்கள். 'என் செயலாவது யாதும் இல்லை. எல்லாம் அவள் செயல்' என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் அந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் போன்றவர்களின் திருக்கரங்களில் நீங்கள் ஜொலிக்கிறீர்கள்.

யாராவது அடுத்தவர்களுக்காக உருகிக் கண்ணீர் சிந்தினால் அந்த உப்புத் திரவத்தில் இந்த உமா மகேஸ்வரி இருப்பாள்.''

''இந்தப் பாடத்தை என்றும் மறவாதே!''

விமானம் தரையைத் தொடும் சமயத்தில் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.

பகிர்வு

தர்ம சாஸ்திரம் கூறும் அருமையான ஆலோசனைகள்.

  1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

_தர்ம_சாஸ்திரம்

Monday, 9 December 2019

நல்லதையே பேசுங்க!

படித்ததில் பிடித்த கதை!


நல்லதையே_பேசுங்கள்...!

விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.

இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும்  நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.

இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.  “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார்.  விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.

அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு.  கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.

இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்   இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது  போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.

உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை  ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா?  நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது என்றார் ஆதிசேஷன்.

Monday, 2 December 2019

சுவையான ஒரு கதை!

*ஒரு குட்டி கதை*

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

 ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

 நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

 அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
 *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

 பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

*பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்*

*யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்*

*யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு*

*யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு*

*சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்*

இறுதியாக இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:

*உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்*

*உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்*

*உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்*

*ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்*

*எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்*

*இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்*


Tuesday, 26 November 2019

கட்டுரை: "இந்தியாவின் வளர்ச்சி காடுகளை நம்பியே உள்ளது"

இந்தியாவின் வளர்ச்சி காடுகளை நம்பியே உள்ளது !
         
            முன்னுரை.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது.
 நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது
காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.


இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 22.8 % காடுகளே! தற்போதைய நிலவரப்படி சுமார் 3,775 சதுர கிலோ மீட்டர்கள்! சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 1,309 சதுர கி.மீ. பரப்பளவு அதிகமாகியிருக்கிறது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் இரண்டு சதவிகிதம். இயற்கையான, ஆரோக்கியமான உயிர் வாழ்க்கைக்கு வனங்கள் மிக அவசியம். மேலும் நீர் வளம் பெருகவும், சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம்!
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியக் காடுகள் வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதி, சமவெப்பப் பகுதி, ஆல்ப்பைன் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கிடைக்கும் மழைப்பொழிவு, மண்ணின் தன்மை, பொதுத் தோற்றம், உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு விரிந்த பகுதிகளாக பதிமூன்று முக்கிய இனக்காடுகள் இந்தியாவில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
இனி காடுகளால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

இந்தியாவைப் பொருத்தவரை காடுகள் செய்யும் மிகப் பெரிய நன்மை என்பது மழைவளம் தருவதுதான்
மழை வளம் சீராக இருப்பதால் தான் நம் நாட்டில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டமுடிகிறது!
அரிசி, கோதுமை, பிற தானியங்கள் காய்கறிகள், பழங்கள் போன்றவை நமது தேவைக்கேற்ப
விளைவிக்கப்
படுகின்றன.
ஒருவேளை எரிபொருளை போல உணவு தேவைக்கும் நாம் மற்ற நாடுகளை நம்பி இருந்தால் அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

காடுகள் செய்யும் மற்றொரு பேருதவி கால்நடை வளர்ப்புக்கு பக்கபலமாக இருப்பதுதான்!

நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.
 
போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லை என்றால் நம்மால் கால்நடைகளை முறையாக பராமரிக்க முடியாது.
பால், இறைச்சி மட்டுமல்லாது தோல்  பொருட்களையும் உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்ய முடிகிறது என்றால் அதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது காடுகள்தான்!

நாம் எழுதுவதற்கு பயன்படுத்தும் காகிதம் தயாரிக்க உதவும் மூலப் பொருளும் காடுகளில் உள்ள மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது அதை அழிக்க பயன்படுத்தும் ரப்பரும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது!

நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.



இன்று வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கதவு ஜன்னல் கட்டில் மேஜை உட்பட பெரிய தொழிற்சாலைகளின் தளவாடங்கள் வரை உற்பத்தி செய்ய மரங்கள் பெரிதும் பயன்படு கின்றன!

 சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி என அனைத்து வகை மருத்துவர்களுக்கும் உதவும் அற்புதமான மூலிகைகளை வனங்களே தருகின்றன.

சந்தனமரம் சோப்புகள் செய்யவும் வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூகலிப்டஸ், ஃபைன் மரங்கள் தைலங்கள் தயாரிக்க பயன்படுத்தப்
படுகின்றன.

தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.

என்னதான் மனிதன் இந்த உலகம் முழுக்க அதிகாரம் செலுத்தினாலும் அவன் இந்த பூமியில் நிலைத்து வாழ அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்வது மிக அவசியமாகும்.
இந்தப் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவற்றின் நலத்திற்கும் காடுகள் பெரிதும் உதவுகின்றன.
புவிவெப்பமடைதல், சுனாமி போன்ற பலவிதமான இயற்கை சீற்றங்களில் இருந்தும் இன்றளவும் காடுகள்தான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.
           
              முடிவுரை

இவ்வாறாக மழைவளம், விவசாயம், உணவு உற்பத்தி,
கால்நடை வளர்ப்பு,
பிற பொருள் உற்பத்தி, தொழிற்சாலை தளவாடங்கள், மருத்துவகுணம் நிறைந்த பொருட்கள் என அத்தனை பயன்களையும் காடுகள் நமக்கு தருகின்றன.
எனவே நம் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல நம் அன்றாட வாழ்க்கைக்கும் உயிர்நாடியாக விளங்குபவை காடுகளே! அத்தகைய காடுகளை எந்நாளும் அழிந்துவிடாமல் முறையாகப் பாதுகாப்போம்!
வளம் பெறுவோம்!
 நன்றி வணக்கம்.

Saturday, 26 October 2019

ரமண மகத்துவம்!

!! படித்ததை பகிர்ந்து உள்ளேன்

#ரமண_மகரிஷியின் புற்று நோயினை கடுமையாக விமர்சித்து அவமதித்த  அண்ணாதுரை..?!!??

அமெரிக்காவில் திருவண்ணாமலை. . .
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார்.

சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன.

தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பைக் காட்டி திருத்தினார்.

பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம்.

இவர் தனக்கு வந்த புற்று நோயைக் குணப்படுத்த இவர் தனது தபோ வலிமையைப் பயன்படுத்த வில்லை.

எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.

இந்த துறவியின் உத்தரவைத் தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல்தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள்.

அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை.

 இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கப் போவதும் இல்லை.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை.
மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்தத் துறவி இருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.

இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும்.

தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல்வாதி இவரை " அண்ணா" ந்து பார்த்து கேலி செய்தார்.

 அந்த அரசியல் வாதி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனிக் கதை.

நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னைப் பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள்.

 அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

 பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தைப் பற்றியும் ரமணருக்குத் தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார்.

இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்றுக் கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர்.
 திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர்.

ரமணர் சில நொடிகள் கண்மூடிப் பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார்.

திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது.

தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano.

திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை  அந்த அமெரிக்கத் தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான் அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தமிழ்நாட்டைத் தாண்டாத இவருக்கு, கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது.

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள்.

மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா.

இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு. புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னியா மாகாணம், எனச் சொல்லுகின்றார்கள்.

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...