பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய
"காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன் படித்துப்
பயன்பெறுங்கள்:
தினமும் நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஆசிரியர் ஒரு உயிருள்ள தவளை என கற்பனை செய்கிறார்.
அந்த வேலையை செய்து முடிப்பது ஒரு தவளையை தின்று முடிப்பதற்கு சமம் என்று அவர் கூறுகிறார். ஆசிரியர் ஏன் தவளையை உதாரணமாகக் கூறுகிறார்? மாம்பழம் ஆப்பிள் என சுவையான விஷயங்களை உதாரணமாக கூறி இருக்கலாமே? என்னதான், நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அத்தியாவசியமானதாக இருந்தாலும் நாம் அவற்றை செய்வதற்கு கஷ்டப்படுகிறோம்; வேண்டா வெறுப்போடு செய்கிறோம்; முடிந்த அளவு அந்த வேலையை ஒத்திப் போட நினைக்கிறோம் எனவேதான் நாம் செய்வதற்கு சிரமப்படும் வேலைகளை ஒரு அவலட்சணமான தவளையாக ஆசிரியர் கற்பனை செய்து தருகிறார். ஒரு தவளையை உண்ணுவது என்பது சாதாரண காரியமல்ல,
எனவே தான் நாம் கஷ்டம் என எண்ணும் வேலைகளை முதலில் முடித்து விட்டால் மற்ற வேலைகள் சுலபமாகிவிடும் என்பதை இதன் மூலம் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்
காலையில் எழுந்தவுடன் மிகவும் கடினமான வேலை என்று நீங்கள் கருதும் வேலையை முதலில் செய்து முடித்து விடுங்கள் ஆம் உங்களை பயப்படுத்தும் அந்த கொடிய தவளையை தின்று முடித்து விடுங்கள்!
🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸
வெற்றிக்கான 7 ஃபார்முலா:
1.உங்களுக்கு எது தேவை என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்.
2. உங்களது இலக்குகளை எழுத்துவடிவில் எழுதி வையுங்கள் அப்பொழுதுதான் அவற்றை பார்க்கும்போதெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
3.உங்கள் இலக்குகளை அடைவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
அதாவது
"செப்டம்பருக்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும்"
இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
4. உங்கள் இலக்குகளை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள்.
5. பட்டியலிட்ட விஷயங்களில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த நன்கு திட்டமிடுங்கள்.
6. நன்கு திட்டமிடப்பட்ட செயல்களை உடனடியாக செயல்படுத்த தொடங்குங்கள்.
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தங்களது திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியதனாலேயே அவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு அருமையான திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதைவிட ஒரு சுமாரான திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது என்பது பல மடங்கு மேலாகும்.
7. உங்கள் இலக்குகளை அடைவதற்கான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். உங்கள் திட்டங்களை பல பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வந்தால் ஒரு நாள் உங்கள் இலக்கை நிச்சயம் அடைந்து விடுவீர்கள்.
🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸
நாளை செய்ய வேண்டியதை இன்றே திட்டமிடுங்கள்.
அடுத்த வாரம் செய்ய வேண்டியது இந்த வாரமே திட்டமிடுங்கள். அதேபோல அடுத்த மாதம் செய்யவேண்டியதை இந்த மாதம் திட்டமிடுங்கள்.
அடுத்த வருடத்துக்கான திட்டங்களை தற்போது செயல்படுத்த தொடங்குங்கள். எதிர்காலத்துக்கான திட்டமிடுதலை தற்போது செயல்படுத்த தொடங்குவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது!
🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸
80/20 ஃபார்முலா:
நம்முடைய 20 சதவீத நடவடிக்கைகள்தான் 80 சதவீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் செய்யும் 20 சதவீத வேலைகள்தான்
நீங்கள் செய்பவற்றின் 80 சதவீத மதிப்பை தீர்மானிக்கின்றன.
இதன் பொருள், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உள்ளடக்கிய ஒரு பட்டியலில் 10 வேலைகள்
இடம்பெற்றிருந்தால் அவற்றில் இரண்டு வேலைகள் மற்ற எட்டு வேலைகளில் ஒட்டு மொத்த மதிப்பை விட
மிக அதிகமான மதிப்பு கொண்டவையாக இருக்கும்.
பல சமயங்களில் மற்ற ஒன்பது வேலைகளையும் விட ஒரு ஒருவேளை அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் அந்த வேலை தான் நீங்கள் முதலில் உண்ணவேண்டிய தவளை!
ஆனால் ஒரு சராசரி மனிதர் தான் செய்ய வேண்டிய 10 வேலைகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு வேலைகளையே பொதுவாக ஒத்திப் போடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன!
மிகவும் மதிப்பு வாய்ந்த 20 சதவீத பணிகளை ஒத்தி வைத்துவிட்டு, அவற்றை விட மிக மிக மதிப்பு குறைந்த 80 சதவீத வேலைகளிலேயே நாம் முழு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் செய்யும் வேலைகள் 20% முக்கியமான வேலைகளா? அல்லது 80 சதவீதம் முக்கியமற்ற மதிப்பு குறைந்த வேலைகளா? என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
80 சதவீத மதிப்பு குறைந்த வேலைகளை செய்வதை விட்டுவிட்டு 20 சதவீத மதிப்புமிக்க வேலைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் பலன்களும் வெகுமதிகளும் அதிகம்! 80 சதவீத முக்கியமற்ற வேலைகளை ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் செய்ய ஆரம்பித்தால் அதுவே ஒரு பழக்கமாகி விடும் அதன் மூலம் எந்த ஒரு மன நிறைவும் நமக்கு கிடைக்கப் போவதில்லை.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 80 சதவீத வேலைகளை செய்ய நாம் ஒதுக்கும் அதே நேரம் தான் மதிப்பு மிக்க 20 சதவீத வேலைகளை செய்யவும் நாம் எடுத்துக் கொள்கிறோம்
எனவே இந்த 80/20 ஃபார்முலாவை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்!
🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸
ஒரு வேலையை குறித்த காலக்கெடுவுக்குள் செய்து முடிப்பதன் மீது நீங்கள் ஒருமித்த கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்கு அடிக்கடி உங்களை நீங்களே மூன்று கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்.
1. என்னுடைய மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்த நடவடிக்கைகள் எவை?
இதை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால் உங்கள் முன்னேற்றத்துக்காக நீங்கள் உண்ண வேண்டிய மிகப்பெரிய தவளைகள் எவை?
2. என்னால் மட்டுமே செய்து முடிக்கக்கூடிய எந்த வேலை அதை நான் சிறப்பாக செய்து முடிக்கும் பட்சத்தில் ஓர் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
இது ஒரு முக்கியமான கேள்வி இந்த வேலையை உங்களை விட யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்ற வகையைச் சேர்ந்த வேலை அது.
ஆனால் அந்த வேலையை நீங்கள் சிறப்பாக செய்து முடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.
உங்கள் விஷயத்தில் இந்த குறிப்பிட்ட தவளை எது?
தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த கேள்வியை கேட்டு அதற்கான விடையை கண்டுபிடியுங்கள்.
விடையை கண்டுபிடித்த பிறகு மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
3. இந்த நொடியில் எனது நேரத்தை எந்த விஷயத்திற்காக செலவிடுவது எனக்கு மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்?
அதாவது இந்த நொடியில் நான் உண்ண வேண்டிய மிகப் பெரிய தவளை எது?
சூழ்நிலைகளைப் பொறுத்து நமது முக்கியமான வேலைகள் மாறுபடலாம் எனவே அந்த நொடியில் நாம் இந்த கேள்வியை கேட்டு பார்த்து நமது முக்கியமான வேலையை செய்து முடிக்க வேண்டும்.
🌺🌸🌻🌸🌺🌺🌸🌻🌸
ABCD Formula:
நீங்கள் உங்கள் வேலைகளை பட்டியலிடும் போது அவற்றை ஏ பி சி டி இ என வரிசைப்படுத்துங்கள். நீங்கள் இந்தபொழுதில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஏ பிரிவில்
வகைப்படுத்துங்கள்.
மிக முக்கியமான வேலைகள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அவற்றை ஏ1 ஏ2 ஏ3 என வரிசைப்படுத்துங்கள்.
ஏ1 வேலை நான் நீங்கள் முதலில் உண்ண வேண்டிய அவலட்சணமான தவளையாகும் எனவே அந்த வேலையை முதலில் செய்து முடியுங்கள்.
பி வகை வேலைகளும் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் தான் ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லாத தவளைக் குஞ்சுகள் போன்றதாகும் எப்பொழுதுமே தவளைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தவளை குஞ்சுகளுக்கு அல்ல!
ஏ பிரிவு வேலைகள் முடிக்கப்படாமல் இருக்கும் போது நீங்கள் பி பிரிவு வேலைகளை தொடங்கவே கூடாது.
சி வகை வேலைகள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தொலைபேசியில் உரையாடுவது மேலும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் பார்ப்பது போன்ற முக்கியமில்லாத செயல்களாகும் இவற்றை செய்வது இனிமையாக இருக்கலாம் ஆனால் அவற்றால் பெரிய உபயோகம் எதுவுமில்லை
டி வகை வேலைகள் நாம் பிறரிடம் ஒப்படைக்க கூடிய வேலைகள் ஆகும் நாம் செய்யவேண்டிய வேலைகள் பிறரால் செய்து முடிக்கக்கூடிய பட்சத்தில் அவர்களிடம் தாராளமாக ஒப்படைக்கலாம் இதன் மூலம் நமக்கு ஏ வகை வேலைகளை முடிப்பதற்கான கால அவகாசம் நிறைய கிடைக்கும்.
இ வகை வேலைகள் நாம் முற்றிலும் செய்ய தேவையே இல்லாத தூக்கி எறியக் கூடிய வேலைகளாகும் இவற்றை பிறிதொரு நாள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
எப்பொழுது உங்கள் ஏ1
வகை வேலைகளை முதலில் முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அப்பொழுதே நீங்கள் சாதனையாளர்களாக மாறு தொடங்குகிறீர்கள்.
🌺🌻🌸🌺🌺🌸 🌸🌻🌸
நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில், அலுவலகத்தில், குடும்பத்தில் எப்படியெல்லாம் செயல்படுகிறோம் என நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
நம் பலம் எது? பலவீனம் எது? என்பதை பட்டியலிட்டு நமது பலவீனங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பல சமயங்களில் நாம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்ட பலவீனமான செயல்களில் மீண்டும் ஈடுபடுவதை தவிர்த்து ஒத்திப் போடுகிறோம் ஆனால் அவ்வாறு செய்யாமல் நமது பலவீனமான விஷயங்களையும் சிறப்பாக செய்வதற்கு நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண்மணி அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருப்பதாலும் அந்த பணிச்சுமை காரணமாக குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க இயலவில்லை என்றும் புலம்பினாள்.
திறன் மேம்பாட்டாளர் ஒருவர் அவளுக்கு ஒரு யோசனை கூறினார் அவளது அலுவலகத்திற்கு அவள் வழங்கும் மதிப்பு மிக்க சேவைகளை பட்டியலிட சொன்னார். அதன்படியே அவள் 17 விஷயங்களைப் பட்டியலிட்டாள். அதிலிருந்து முக்கியமான முதல் மூன்று விஷயங்களை தேர்ந்தெடுக்க சொன்னார். அவளும் அப்படியே தேர்ந்தெடுத்தாள்.
நீ தேர்ந்தெடுத்த அந்த மூன்று விஷயங்களைத் தவிர மீதமுள்ள 14 விஷயங்களும் தேவையில்லாத மற்றவர்களிடம் ஒப்படைக்க கூடிய விஷயங்களே
என்றார்
அந்த திறன் மேம்பாட்டாளர் .
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது நினைத்து பார்த்தால் அவள் தேர்ந்தெடுத்த முதல் மூன்று விஷயங்கள்தான் தனது அலுவலகத்திற்கு அவள் 90 சதவீத மதிப்புமிக்க சேவையை வழங்கும் விஷயங்களாக இருந்தன
இந்தப் பட்டியலை தனது முதலாளியிடம் காட்டி அவள் வழங்கிவந்த மதிப்பு குறைவான 14 விஷயங்களை வேறொருவருக்கு பகிர்ந்தளிக்க செய்ததன் மூலம் இவளுடைய திறமை மேம்பட்டதோடு சம்பளமும் இரட்டிப்பானது குடும்பத்துக்காக செலவழிக்க நேரமும் கிடைத்தது.
🌺🌻🌸🌺🌺🌸🌻🌸
எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் அதற்கு தேவையான விஷயங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் அந்த செயல் சிறப்பாக நிறைவுபெறும்.
நாம் சிறப்பாக செயல்படுவதை ஏதோ ஒரு காரணி கட்டுப்படுத்துகிறது அது எது என்பதை நன்கு ஆராய்ந்து அந்த காரணியை சரி செய்து விட்டால் நமது செயல்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
ஒருவர் வாழ்வில் வெற்றி பெற சுய ஊக்கம் என்பது மிகவும் முக்கியமாகும் அடுத்தவர் வந்து நம்மை ஊக்கப்படுத்தும் என்று எப்போதும் எதிர்பார்க்கக்கூடாது அது பேருந்துகள் ஓடாத சாலையில் அவற்றுக்காக நாம் காத்திருப்பது போன்றதாகும்.
நமக்கு நாமே அழுத்தம் கொடுத்துக் கொண்டு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொண்டு நமது இலக்குகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
நம்முடைய குறைகளை பிறரிடம் கூறாமல் நமக்கு நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு நேர்மறை எண்ணங்களுடன் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
🌻🌸🌺🌺🌸🌻🌸🌻🌸
தொழில்நுட்பத்தை எவ்வளவு குறைவாக அதே சமயம் உபயோகமாக பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துங்கள் ஸ்மார்ட் போன் போன்ற கருவிகளை ஒரு நாளில் சில மணி நேரங்களோ ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுக்கவோ பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
இவ்வாறு செய்தால் நாம் நம் முக்கியமான வேலைகளை செய்வதற்கு மேலும் கூடுதலான கால அவகாசமும் நேரமும் கிடைக்கும்.
ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்களாக
திறமை குறைவானவர்களாக உணரும் போது உங்களது செயல்களை ஒத்தி போடுகிறீர்கள். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது எனவே உங்களது திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.
நாளையோடு காலக்கெடு முடிவதாக கற்பனை செய்துகொண்டு உங்களது அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும்.
🌻🌸🌺🌺🌸🌻🌸🌻🌸