Thursday, 17 October 2019

பாசிட்டிவ் எனர்ஜி! (படித்ததில் பிடித்தது)

சாமான்ய மனிதர்களால் எப்போதும் பாசிட்டிவ்வாகவே இருந்துவிட முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வருகிறபோது, அவை தவறானவை என்று நீங்கள் உணர்வதே போதுமானது. 

அதைவிட்டுவிட்டு, 'ஐயோ, எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வருகின்றனவே' என்று அதன் மீதே கவனம் வைக்காதீர்கள்.

காரணம், எதிர்மறை எண்ணங்கள் உங்களை மட்டுமே பிடித்திருக்கும் ஒரு வியாதி அல்ல... எல்லோருக்கும் வந்து போகும் சாதாரண பிரச்னை தான்' 

அது எப்படி ஒரு மனிதன் எப்போதும் பாசிட்டிவ்வான சிந்தனைகளோடு மட்டுமே இருக்க முடியும்? 

எந்த எண் ணங்களை வேண்டாம் என்று மெனக்கெட்டு துரத்த நினைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் நம்மை விடாமல் துரத்தும் என்பதுதான் உண்மை. 

எதிர் மறை எண்ணங்கள் வந்துவிடக் கூடாது என்ற பயத்திலும், அதீதமான அக்கறையிலும் அதைப் பற்றியே அதிக நேரம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.

பாசிட்டிவ்வாக இருக்க முனைதல் என்பது ஒரு பகீரதப் பிரயத்தனமாகப் பார்க்கப்பட்டால், அது பெரும் சுமை ஆகிறது. 

மனிதனின் மனதில் எல்லா எண்ணங்களுக்கும் இடம் உண்டு. அது வரும்... போகும். இந்த எண்ணம் எனக்கு வரவே கூடாது என்று செயற்கையாக அதைத் தடுக்க முனைவது, மனதை ஏமாற்றும் தந்திரம் அல்ல... மூளையை ஏமாற்றும் வேலை.

நேர்மறை எண்ணங்கள் என்ற மனோநிலையை மேலோட்டமாகவே கவனித்துக்கொண்டு இருக்கிறோம். 

இன்று எனக்கு எல்லாமும் நன்றாகவே நடக்கும்', 'நான் போகிற இடத்தில் அந்த மனிதர் நிச்சயம் இருப்பார்', 'இன்றைக்கு நான் எதிர்பார்த்தபடி அந்த வேலை முடிந்துவிடும்

இப்படி நேர்மறையான வாக்கியங்களை மனதுக்குள் 10 முறை சொல்லிக் கொண்டால், பாசிட்டிவ்வாக இருந்துவிட முடியுமா? 

இன்னமும் அழியாமல் மனதுக்குள்கிடக்கும் எதிர்மறை எண்ணத்தின் மீதுதான் இந்த பாசிட்டிவ் சிந்தனைகள் வண்ணம் பூசி அடுக்கிவைக்கிறோம். இந்தக் குறுக்குசால் வேலைகள் எப்படி நிரந்தரத் தீர்வைத் தரும்? 

நேர்மறை எண்ணங்கள் வேண்டும் என்றால், எதன் மீதாவது தாகம் இருக்க வேண்டும். அதன் மீது அசைத்துவிட முடியாத ஆசை இருக்க வேண்டும். அளப்பரிய காதல் இருக்க வேண்டும். இது எனக்கு வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அதுதான் நமது ஒவ்வொரு படிநிலையையும் பாசிட்டிவ்வாகப் பார்க்க வைக்கும்.

வாழ்வியலில் நடைமுறைகளின் பார்வையில் நின்று பார்த்தால், ஓர் உண்மை புலப்படுகிறது. அது, 'எதிர்மறைச் சிந்தனைகளை எதிர்கொள்வதுதான் நேர்மறையாக இருத்தல்' என்பது.

ஏதாவது ஓர் இடத்தை அல்லது இலக்கை எட்டுவதில் தீராத ஆசை இருக்கும் என்றால், எதிர்மறைச் சிந்தனைகள் என்று சொல்லப்படும் எந்த விஷயங்களின் மீதும் நமது கவனம் குவிவது இல்லை. 

காரணம், கவனம் இலக்கின் மீதும் ஆசையின் மீதும் குவிந்து இருக்கிறது.

பாசிட்டிவ்வாக இருக்க முனைதல் என்பது சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு விஷயம். 

இலக்கை நோக்கிக் குறிவைத்து ஓடுவோம். இடறிவிழுந்தால், மீண்டும் எழுந்து ஓடுவோம். 

ஓட ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மூன்று முறை 'நான் ஓடும்போது ஒன்றும் ஆகாது. வேகமாக ஓடி என் இலக்கைத் தொடுவேன்' என்று சொல்லிக்கொள்வதால் மட்டும் காரியம் நடக்காது.

இப்படி நீங்கள் திட்டமிட்டு பாசிட்டிவ்வாக யோசித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருவேளை இடறிவிழுந்துவிட்டால் என்று ஒரு சிந்தனை வரலாம். வந்துவிட்டுப் போகட்டும். அதை மெனக்கெட்டுத் தடுக்க முனையாதீர்கள். விழுந்தால் என்ன, மீண்டும் எழுந்துகொள்வேன் என்று தைரியமாக அந்த எண்ணத்துக்குப் பதில் சொல்லிப் பழகிக்கொள்வோம்.

எதிர்மறை எண்ணங்கள் வந்தால், அதைத் தடுக்க முனைவதைவிட, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவோ, ஒருவேளை நம் கவனத்தை அரித்துக்கொண்டே இருந்தால், அந்த எண்ணத்துக்குப் பதில் சொல்வதற்கோ தேவையான மனோநிலைதான் பாசிட்டிவ்வாக இருக்க முனைவதன் தொடர்புப் புள்ளி

எதிர்மறை எண்ணங்கள் வரக் கூடாது என்ற ஆழ்ந்த யோசனையுடன், ஒவ்வொரு செயலையும் காரண ஆராய்ச்சிகளுடன் நடத்துகிற சுபாவம் நிறையப் பேருக்கு வர ஆரம்பித்து இருக்கிறது. 

இதுவும் ஒரு வகைப் பிரச்னைதான். எண்ணங்களைத் தடுக்க முனைவதால் வருகிற பிரச்னை

எண்ணங்களை நெருக்கடிக்கு ஆளாக்காமல் கையாளுங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் வரும்போது, அது தவறு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

தொடர்ந்து உங்கள் வேலைகளைப் பாருங்கள். அதன் மீது நீங்கள் கவனம் செலுத்தவில்லை எனில், அது உங்களைக் கண்டுகொள்ளப்போவது இல்லை. 

எனக்கு எதிர்மறை எண்ணங்களே வரக் கூடாது என்று தெருமுனையில் இருக்கிற சாமியிடம் போய் வேண்டுதல் வைக்காதீர்கள். 

இலக்கின் மீது குறிவைத்து ஓடுவோம்... இடறி விழுந்தால் எழுந்துகொள்வோம் . வாழ்க்கை எளிதானதுதான். அதைத் தேவை இல்லா மல் நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டிய அவசியம் இல்லை

படித்ததில் அவசியமானது....🌹🌹🌹🌹🌹நட்புடன் வெங்கட்ராமன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...